Friday, July 9, 2021

தலித் தரப்பினர் எதிர்கொள்வது : ஜெயமோகன்

 ன்றைய சூழலில் தலித் தரப்பினர் எதிர்கொள்வது ’ஒதுக்கிவைத்தல்’ என்னும் எதிர்வியூகத்தை. அதை வெல்ல ’அத்தனை இடங்களிலும் பரவுதல்’ என்னும் போர்முறையை அவர்கள் கையிலெடுக்கிறார்கள்.

ன்று தலித் இயக்கங்கள் குறுங்குழுக்களாக, அரசியல்-சமூகவெளிக்கு வெளியே நின்று கூச்சலிடுபவர்களாக தங்களை நிறுத்திக் கொள்ள விரும்பவில்லை. அவ்வாறென்றால் மொத்த சூழலும் அவர்களை அப்படியே கடந்துசென்றுவிடும் என அவர்கள் அறிந்திருக்கிறார்கள்.
தலித் அமைப்பினர் இன்று அத்தனை அறிவுச்சூழல்களிலும் ஊடுருவ விரும்புகிறார்கள். அத்தனை பேரிடமும் விவாதிக்க விரும்புகிறார்கள். தங்கள் செயல்பாட்டில் சற்றேனும் ஆர்வம்கொண்ட அனைவரையும் உள்ளிழுத்துக்கொள்ள முயல்கிறார்கள். அவர்களின் போர்முறை இன்று அதுவாகவே உள்ளது.
விரைவிலேயே இன்று அவர்கள் நுழையாத பல களங்களில் அவர்களின் ஊடுருவல் நிகழலாம். சிற்பக்கலை, ஆலயக்கட்டுமானக்கலை, இந்து வழிபாட்டுமுறைகள், சிந்தனைமுறைகள் உட்பட பலவற்றில் ஆழ்ந்த தலித் பார்வைகள் உருவாகலாம். அது பெரிய கொந்தளிப்பையும் மாற்றங்களையும் உருவாக்கலாம்.


ஓர் உதாரணம், பேரா.டி.தர்மராஜ். அவருக்கும் பிற தலித் அறிவியக்கவாதிகளுக்கும் உள்ள வேறுபாடு என்ன? அவர் தலித் சிந்தனைச்சூழலை நோக்கிப் பேசவில்லை. தலித்துக்களுக்கு சிந்தனையில் இடம்கோரி எழுதவில்லை. அவர் தமிழ்ச்சூழலை நோக்கிப் பேசுகிறார். ஒட்டுமொத்தமாக அதை வழிநடத்த முயல்கிறார்.
ஆகவே அவர் என்னுடன் பேசியே ஆகவேண்டும். தமிழில் எழுதும் அத்தனை எழுத்தாளர்களையும் கருத்தில் கொண்டபடியே பேசவும் எழுதவும் வேண்டும். அவர் அடுத்த தலைமுறையின் தலித் சிந்தனையாளர். உண்மையில் நான் தர்மராஜைப் பற்றி தலித் அரசியல்- கலாச்சாரம் சார்ந்து யோசிப்பதே இல்லை. என்னுடைய புனைவெழுத்தின் சிக்கல்களில்தான் அவரை இணைத்துக்கொண்டு யோசிக்கிறேன்.
நீலம் முன்னெடுப்பது இந்த அரசியலைத்தான். தர்மராஜ், ஸ்டாலின் ராஜாங்கம் போன்று இந்த உரையாடலை உருவாக்கி முன்னெடுக்கும் தலித் அறிவுஜீவிகள்மேல் மட்டும் குறிவைத்து அவதூறு செய்யப்படுகிறது என்பதைக் கவனியுங்கள். அவர்களின் நம்பகத்தன்மை சிதைக்கப்படுகிறது.
இந்த அவதூறாளர்கள் தமிழ்ச்சிந்தனையில் ஒரு ’சேரி’யை உருவாக்கி தலிதியர்களுக்கு அளிக்கிறார்கள், அங்கிருந்து அவர்கள் வெளியேறலாகாது என வற்புறுத்துகிறார்கள், வெளியேறினால் வசைபாடுகிறார்கள். ‘நாங்கள் சிந்திக்கிறோம், வழிகாட்டுகிறோம், எங்களுக்குப்பின்னால் கொடிபிடித்து கோஷமிட்டு வாருங்கள், உங்களுக்கு வேறென்ன தகுதி?’ என்கிறார்கள்.
இங்கே தலித் எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் தானாக சிந்தித்தால், தனிவழி கண்டால் கொந்தளிக்கிறார்கள். மிகமிக மெல்ல தங்களை விமர்சித்தால் இழிவுசெய்து அவதூறுசெய்து வசைபாடி கொப்பளிக்கிறார்கள். “நாங்கள் போட்ட பிச்சை, எங்களுக்கு நன்றியுடன் இருங்கள்” என்கிறார்கள். எனில் தலைமைகொள்ளும் சிந்தனையாளர்களை இவர்கள் எப்படி சகிப்பார்கள்?
கொஞ்சம் புரட்டிப் பாருங்கள். தர்மராஜ், ஸ்டாலின் ராஜாங்கம் ஆகியோரின் பங்களிப்பையும் அவர்களை வசைபாடுபவர்களின் அறிவுத்தகுதியையும். அவர்கள் இருவரும் இன்று தமிழ்ச்சூழலையே பாதிக்கும் சிந்தனையாளர்கள். அந்த அளவுக்கு அடிப்படை ஆய்வுகள் செய்தவர்கள். இவர்கள் எந்த அடிப்படையில் தங்களை அவர்களுக்கு வழிகாட்டுபவர்களாக எண்ணிக்கொள்கிறார்கள்?
உருவாகி மேலெழுந்து வரும் ஒரு சிந்தனைமரபில், தங்கள் சாதியினரால் ஒடுக்கப்பட்டவர்களின் அறிவியக்கத்தில் எந்தத் தகுதியும் இல்லாமலேயே ஊடுருவி அவர்களுக்கு ஆணையிட இவர்களுக்கு கூச்சமே இல்லை என்பதை பாருங்கள். அவர்களால் சொந்தமாகச் சிந்திக்க முடியாது, அவர்கள் சில்லறைக்குச் சோரம்போவார்கள் என எப்படி இயல்பாக எண்ணிக் கொள்கிறார்கள் என்று பாருங்கள். வேறொன்றுமில்லை, சாதிமேட்டிமைத்தனம். அதைத்தான் முற்போக்குக் கொள்கையென மாயம் காட்டி முன்வைக்கிறார்கள்.
தலித் அழகியல் பற்றி பேசும்போது நண்பர் சொன்னார். “நாங்கள் தமிழிலக்கியத்தில் ஒரு தலித் தரப்பை உருவாக்க முயலவில்லை. அது ஏற்கனவே உருவாகிவிட்டது. ஒட்டுமொத்த தமிழிலக்கியப் பார்வையை எங்கள் நோக்கில் திருப்பியமைக்க விரும்புகிறோம். இமையம் தலித் இலக்கியம் எழுதுவது அல்ல எங்கள் நோக்கம். ஒரு பிராமண எழுத்தாளர் எழுதினாலும் அதில் தலித் பார்வை ஊடுருவி இருக்கவேண்டும் என்பதுதான்.” அந்த வியூகமே நவீன இலக்கியத்தின் அத்தனை படைப்பாளிகளை நோக்கியும் அவர்களை திருப்புகிறது. அவர்களிடம் விவாதிக்க விரும்புகிறது.



~

No comments:

Post a Comment

സംവരണത്തിന്റെ സാമൂഹ്യപാഠം : രഞ്ജിത്ത് ചട്ടഞ്ചാൽ

  കാലങ്ങളായി തുടരുന്ന ജാതി - മത വിവേചനങ്ങളുടെ പ്രൊഫസർ രാജ് മദ്രാസ് ഐഐടി യുടെ പേര് അന്നേ മാറ്റിയെഴുതിയിരുന്നു - 'അയ്യർ അയ്യങ്കാർ ടെക്നോളജ...