Friday, July 9, 2021

அருட்தந்தை ஸ்டேன் – உங்களைக் கொன்றது எது? - எஸ்.வி.ராஜதுரை



மனித விரோதத்தையும் மூர்க்கதனமான அதிகாரத்தையும்

வைத்துக் கொண்டிருக்கும் மூர்க்கர்களைத்

தட்டிக் கேட்ட உங்கள் அறத் துணிச்சலா?

ழங்குடி மக்களின் கண்ணியத்தை, பண்பாட்டை

அவர்களது சுயத்தை

உயர்த்துப் பிடித்தீர்களே

அந்தக் குற்றமா?

சிங்கமும் மானும் ஒரே குட்டையில் நீர் அருந்தும்

சமாதான சகவாழ்வு பற்றிக் கனவு கண்டீர்களே

அந்தக் கனவா?

எந்தக் கொடுஞ்சிறையாலும் உங்களிடமிருந்து

அகற்ற முடியாதபடி உங்கள் தோலைப் போலக்

கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருந்த உங்கள்

உன்னத இலட்சியங்களா?

மனித விரோதத்தையும் மூர்க்கதனமான அதிகாரத்தையும்

வைத்துக் கொண்டிருக்கும் மூர்க்கர்களைத்

தட்டிக் கேட்ட உங்கள் அறத் துணிச்சலா?

தாதுப் பொருள்களைச் சுரண்டும் உரிமையையும் உரிமத்தையும்

பெற்றுள்ள டாட்டா, அதானி, எஸ்ஸார் குழுமங்களை விடக்

காலங்காலமாகக் கானகத்தைக் காத்து நின்ற ஆதிவாசிகளின்

உரிமைகள் புனிதமானவை என்று கருதினீர்களே,

அந்தக் கருத்தா?

இந்த பூமியில் சபிக்கப்பட்ட உழைக்கும் மக்களுக்கும்

ஒடுக்கப்பட்டோர்களுக்கும்

பரலோக சாம்ராஜ்யத்தைக் காட்டாது

இவ்வுலகில், இங்கே, இன்றே விடுதலை சாத்தியம்

என நம்பினீர்களே, அந்த நம்பிக்கையா?

வன்முறை வழி விடுதலைக்கு ஒரு போதும் வழிவிடாது

என்று போதித்து வந்தீர்களே, அந்த போதனையா?

தள்ளாடும் உடல் தடுமாறி விழாமலிருக்க

ஒரு கைத்தடிக்காக சிறையில் ஏங்கினீர்களே,

அந்த ஏக்கமா?

ஒரு ஜோடி செருப்புக்காக சிறையதிகாரிகளின்

கருணைக்குக் காத்திருந்தீர்களே, அந்த அவலமா?

நீதி தேவதையின் கண்கள் ஒருபோதும் திறக்காது

பார்த்துக் கொண்டவர்களின் கதவுகளைத்

தட்டிக் கொண்டிருந்தீர்களே

அந்தத் தட்டல்களா?

எந்தக் குற்றத்தை இழைத்தீர்கள்

நீங்கள் கொல்லப்படுவதற்கு?

நோபல் பரிசு பெற்ற போலந்துக் கவிஞர்

விஸ்லாவா ஸிம்போர்ஸ்கா எழுதியது போல:

எதுவும் மாறவில்லை

உடல் நடுங்குகிறது

ரோமப் பேரரசுக்கு முன்

அதற்குப் பின் இருபதாம் நூற்றாண்டில்

ஏசுவுக்கு முன், அவருக்குப் பின்

நடுங்கியதைப் போலவே.

சித்திரவதை எப்போதும் போலவே இப்போதும்

ஒரே வேறுபாடு –

இன்று உலகம் சுருங்கிவிட்டதால்

பக்கத்து அறையில் நடப்பது போல அது





No comments:

Post a Comment

സംവരണത്തിന്റെ സാമൂഹ്യപാഠം : രഞ്ജിത്ത് ചട്ടഞ്ചാൽ

  കാലങ്ങളായി തുടരുന്ന ജാതി - മത വിവേചനങ്ങളുടെ പ്രൊഫസർ രാജ് മദ്രാസ് ഐഐടി യുടെ പേര് അന്നേ മാറ്റിയെഴുതിയിരുന്നു - 'അയ്യർ അയ്യങ്കാർ ടെക്നോളജ...