ரஜினியின் இந்துத்துவ பயங்கரவாத அரசியலை எதிர்ப்பதாய் வேடமிட்டு தலித் புரட்சிக் கலைஞன் ரஞ்சித்தின் கலைப் பயணத்தை நசுக்கத் துடிக்கும் தமிழ்த்தேசியப் படைப்பாளிகளே!
பார்ப்பனியத்தின் கனவுக் கருவூலத்தை சாதிவெறியினூடாக தாங்கிப் பிடித்து சூத்திரப் பட்டமேற்ற அடிமைக் கூலிகள் நீங்கள்.
திரையெங்கிலும் வன்முறை, சாதியப் பெருமிதம், மொழியினக் கலாச்சாரப் பேரழிவு, ஆபாசம் போன்றவற்றை ஆயுதமாக்கி எம் இளந்தலைமுறையை மிக நுட்பமாக வணிகப் பொருளாக்கி வயிறு கொழுத்து வந்த தமிழ்த்தேசிய முற்போக்கு திரைப்படப் புரட்சியாளர்களாகிய உங்களுக்கு இப்போது சமூக அவலத்தின் பால் பெருத்த கோபம் வந்திருக்கிறது.
பாவலன் பட்டுக்கோட்டையின் பாடல்கள் தான் எம்ஜியாரை மக்களிடத்தில் சேர்த்தது என்று பெருமை பேசும் அறிவு ஜீவிகளாகிய உங்களின் கலைப்பற்றை தற்போது ரஜினிக்கொரு ரஞ்சித் என்கிற வரையறையில் பொருத்திப் பார்த்தால் எம்ஜியாரும் ரஜினியும் ஒன்று என்பது சிறு வேறுபாடுகளைக் கடந்து நமக்குப் புலனாகும்.
எம்ஜியார் செய்த அத்தனை இழிவினும் இழிவான அடாவடிகளையும் சேர்த்து தான் நமது அரை நூற்றாண்டு கால திராவிட அவல ஆட்சியைக் கணக்கிட முடியும்.
ரஜினி செய்யக் கருதும் கீழ்த்தரமான அரசியல் நம்மை கற்காலத்திற்குக் கொண்டு போவதோடு நாட்டையே சுடுகாடாக்கும் என்பதறிந்து அதனை நாம் தோலுரிக்க வேண்டியது காலத்தின் அவசியம்.
என்னுடைய கேள்வி என்னவெனில், எம்ஜியாரின் பட்டுக்கோட்டை மக்கள் கலைஞனாகும் போது, ரஜினியின் ரஞ்சித் மட்டும் எப்படி மக்கள் துரோகியானான்?.....
பல்லாயிரம் பட்டுக்கோட்டைகள் சேர்ந்து இணை நிற்கவியலாத, உழைக்கும் மக்களின் விடுதலையின் பொருட்டு தன்னையே தந்த எம் பாட்டன் புரட்சிப்பாவலர் தமிழ்ஒளியையும் அவர் கடலளவு குவித்த அற இலக்கியங்களையும் குழிதோண்டிப் புதைத்தவர்கள் தானே நீங்கள்!
உங்களின் கருத்துப் படி, தமிழினத் துரோகி என்றான ரஞ்சித்தை விட்டொழித்து தமிழினப் போராளியான ராசு படையாட்சி திரைப்பட இயக்குனரின் சமூகப் புரட்சியை மெச்சுங்கள்; அதன் புகழை கூடி கூடிப் பேசுங்கள்; கும்மியடித்துப் பாடுங்கள்; எங்களுக்குக் கவலையில்லை. ஏனென்றால் நீங்கள் அப்படித்தான்.
குடிசை கொளுத்துபவனுக்கு பரணி பாடியவர்கள் நீங்கள். ஏய்ப்பதற்கென்றே பிறந்தவர்களே! எங்கள் வாழ்க்கை சிறப்பீனும் பேறுடைத்த கலை!
கலை மக்களுக்கானது; மானுடத்தை வழி நடத்தக் கூடியது; பூமியின் முகத்தைப் பிரதிபலிக்கக் கூடியது.
உங்கள் மனதில் ஆழப் படிந்திருக்கும் சாதிவெறி, மதவெறியைக் கொன்றொழிக்கும் போதுதான் நீங்கள் கலைஞனாகிறீர்கள்; அதுவன்றி உங்கள் படைப்புகளை, எழுத்துக்களை நாங்கள் கால் தூசெனக் கடந்து செல்வோம்.
உங்கள் படைப்புக் காகிதங்களைக் கிழித்து எங்கள் குழந்தைகளுக்கு கக்கா துடைத்து எறிவோம்!
-

No comments:
Post a Comment