Monday, July 5, 2021

சித்தார்த்தா புத்தகசாலையின் பெளத்த தர்ம விளக்கம் : ஸ்டாலின் ராஜாங்கம்



மிழில் முதல் மெய்யியல் காப்பியம் மணிமேகலை.இதன் முதல் பதிப்பை (1894)மயிலை சண்முகம் பிள்ளை பதிப்பித்தாலும்,திருத்தப் பதிப்பை (1898) கொணர்ந்தவர் உவேசா.மற்ற நூல்கள் போலன்றி இதை பதிப்பிக்க உவேசா கடும் சிரமங்களை எதிர்கொண்டார்.காப்பியத்தை விளங்கிக் கொள்வதற்கு பழைய உரை இருந்திருக்கவில்லை.அது பெளத்த சமய காப்பியம் என்று தெரிவதற்கே நீண்ட நாட்களாயிற்று.நண்பர்கள்,ஆங்கில நூல்கள் வழியாக புரிந்து கொண்ட பின்னர் 130 பக்க அறிமுகவுரை, கதைச் சுருக்கம்,காதைகள் வாரியாக குறிப்புகள்
என்றமைத்து பதிப்பித்தார் உவேசா .
மணிமேகலையின் 30 காதைகளில் முதல் 26 காதைகள் மட்டுமே கதையோடு கூடிய காப்பிய அமைப்பு கொண்டவை. இறுதி 4 இயல்கள் வேறுபட்டவை; இவை முழுக்க முழுக்க மெய்யியல் பகுதிகள். இந்நூலுக்கு உரை எழுதியோர் இறுதி 4 காதைகளுக்கு வரும்போது தயங்கியே நகருவதை பார்க்கலாம்.சமயங்கள், மெய்யியல் பள்ளிகள்,பெளத்த தர்மம் போன்ற காப்பியத்தின் இன்றியமையாத பகுதிகள் இவற்றில் தான் உள்ளன. அதிலும் 29, 30 ஆகிய இறுதி இரண்டு காதைகள் இன்னும் முக்கியமானவை. இரண்டு காதைகளிலும் இறுதி உண்மையை அறிய மணிமேகலை அறவணரிடம் பேசுகிறாள்.எனவே இதை அறிய பெளத்த மெய்யியல் தொடர்ச்சி தேவை.இதன்படி தமிழில் இன்று வரையிலும் மணிமேகலைக்கு முழுமையான உரை வரவில்லை.இன்று வரையிலும் இந்த குறை நிறைவு செய்யப்படவில்லை.முழுமையான உரை என்ற பெயரில் உலவும் நூல்களையே படித்து வருகிறோம்.தமிழ்ப் புலமையுலகில் உலவிய சைவ /இந்து சார்பான செல்வாக்கு இக்குறைபாட்டுக்கான ஒரு காரணம்.
தமிழகத்தில் பெளத்தம் எந்த அளவிற்கு செழித்து இருந்திருந்தால் இத்தகைய மெய்யியல் நூல் உண்டாயிருக்க வேண்டும் என்பதை யாரும் யூகித்துவிடமுடியும்.அதே அளவிற்கு அது எதிர்கொள்ளப்பட்டும் இருக்கிறது. அதனால் தான் இத்தகைய வலுவான நூல் இருந்தும் அதை புரிந்து கொள்வதற்கான பயில்முறை விடுபட்டு போயிருக்கிறது.உவேசா பெளத்தத்தை உள்ளூர் மரபிலிருந்து புரிந்து கொள்ளாமல் ஆங்கிலம் வழி 'வெளி 'யிலிருந்து புரிந்தே தமிழ்ப்பகுதி பெளத்தத்தை விளக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.இதையே பெளத்தம் நம் பண்பாட்டில் உள்'மெய்'யாக இருக்கும் நிலையில் புறத்தே நின்று புரிந்து கொள்ள முடியாது என்று அயோத்திதாசர் சொன்னார் என்பது வேறு விசயம்.மதம் என்பது பற்றி உருவாகியிருந்த நவீன அளவுகோல்களிலிருந்தும் அதை புரிந்து கொள்ள முடியாது.சிலப்பதிகாரத்தை அரசியல் ரீதியாக கொண்டாட முடிந்தவர்களால் மணிமேகலைக்குள் ஆழமாக செல்ல முடியாமைக்கு அதன் மெய்யியல் புலப்படாமையே காரணம்.
இந்நிலையில் 29ஆம் காதையின் 49 ஆம் அடிக்கு மேல் தனக்கு விளங்கவில்லை என்றும்,பலரிடத்து விசாரித்தும் புரியவில்லை என்றும் கூறி உவேசா குறிப்புரை எழுத முன்வரவில்லை . இன்று வரை முழுமையாக விளக்கப்படாமலேயே அக்காப்பியத்தை வாசித்து வருகிறோம்.இதற்கு பிறகு 29 ஆம் காதைக்கு மட்டும் நாராயண அய்யங்கார் என்பவர் 1905 ஆம் ஆண்டு அநுமான விளக்கம் எழுதினார்.பின்னர் 1928-ல் கிருஷ்ணசாமி அய்யங்கார் என்பவர் 29 ஆம் காதையிலுள்ள அளவை பகுதி பற்றி ஆய்வு எழுதினார்.
இந்நிலையில் தான் வேறொரு திசையிலிருந்து இதற்கொரு உரை வந்துள்ளது.அதை தமிழ் புலமையுலகமும் சமகால பதிப்புலகமும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அயோத்திதாசரின் மறைவிற்கு பிறகு அவர் வழிவந்தோர் அயோத்திதாசர் நூல்களையும் பிறர் நூல்களையும் வெளியிட கோலார் தங்கவயலில் சித்தார்த்தா புத்தகசாலை என்ற பெயரில் பதிப்பகம் ஒன்றை தொடங்கினர்.அந்த பதிப்பகம் சார்பாக பல நூல்கள் வெளியாயின.
அதில் பெளத்த சங்கத்தை சார்ந்த பிரம்பை சி.மாணிக்கம் என்பவர் மணிமேகலையின் முப்பதாம் காதையாகிய "பவத்திறமறுகெனப்பாவை நோற்ற காதை "க்கான உரையை எழுதி மூலத்தோடு சேர்த்து "பெளத்த தர்ம விளக்கம் " என்ற தலைப்பில் 58 பக்க நூலாக வெளியிட்டார்.அந்நூலின் அட்டைதான் கீழே இருக்கிறது.1930 களில் முதல் பதிப்பு வெளியாகியிருக்கிறது.1953 - ஆம் ஆண்டின் இரண்டாம் பதிப்பு அட்டை இது.
2006 ஆம் ஆண்டு இந்நூலைப் பற்றி கேள்விபட்டேன்.அப்போதிலிருந்து தேடிக்கொண்டிருந்தேன்.கடந்த மாதம் கோலார் தங்கவயலுக்கு சென்றிருந்தபோது சகோதரர் துரை.ராஜேந்திரன் வீட்டில் இந்நூலை கண்ணுற்ற தருணத்தில் ஏற்பட்ட உற்சாகத்திற்கு அளவே இல்லை.நூலை படித்து வருகிறேன். புரிதல் கைகூடும் போது நூலை பற்றி எழுத வேண்டும்.
இந்நூலை வெளியிட்ட சித்தார்த்தா புத்தகசாலை தொடங்கப்பட்ட நூற்றாண்டு இது (1919 - 2019)



No comments:

Post a Comment

സംവരണത്തിന്റെ സാമൂഹ്യപാഠം : രഞ്ജിത്ത് ചട്ടഞ്ചാൽ

  കാലങ്ങളായി തുടരുന്ന ജാതി - മത വിവേചനങ്ങളുടെ പ്രൊഫസർ രാജ് മദ്രാസ് ഐഐടി യുടെ പേര് അന്നേ മാറ്റിയെഴുതിയിരുന്നു - 'അയ്യർ അയ്യങ്കാർ ടെക്നോളജ...