Monday, June 14, 2021

அருள் முத்துக்குமாரனின் ஓணம் பண்டிகை ஒரு பௌத்த பண்பாடு:பகுப்பாய்வு, இலஞ்சி அ கண்ணன் :

 

"திருப்பதி மலைக்கு புல்லிக்குன்றம் என்ற பெயரும் உள்ளது. இந்தப் பெயர் வரக்காரணம் புல்லி என்ற களர்பிர மன்னன் இந்தப் பகுதியை ஆட்சி செய்ததால். இது புல்லிக்குன்றம் எனப் பெயர் பெற்றிருக்கிறது. வெங்கடேசப் பெருமாள் கோயிலின் உற்சவரை மலையப்பசாமி என்று இன்றும் மக்கள் அழைக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது."

ந்த வருடம் நீலம் பப்ளிகேஷன் சார்பாக வெளியிடப்பட்டுள்ள எழுத்தாளர் அருள் முத்துக்குமரன் அவர்கள் எழுதிய 'ஓணம் பண்டிகை பௌத்தப் பண்பாட்டு வரலாறு' என்னும் அரிய புத்தகம் என்று சொல்லமாட்டேன் மாறாக பௌத்தம் பற்றிய , பௌத்த பண்பாட்டுக் கூறுகளை பிற மதங்கள் எவ்வாறு தனதாக்கிக் கொண்டுள்ளன என்பதை விவரிக்கும் அரியதோர் 'பொக்கிசம்' என்றே கூறுவேன். அந்தப் பொக்கிஷத்திலிருந்து நானறிந்த தகவல்களை இங்கு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

ஏன் நான் இந்தப் புத்தகத்தை அரிய பொக்கிஷம் என்று கூறுகிறேன் என்றால் இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் ஓணம் பண்டிகையை மையமாக வைத்து , திருப்பதி மலையப்பசாமி (திருப்பதி வெங்கடாஜலபதி), ஐயப்பன் சாஸ்தா ,கபாலீசுவரர் , காஞ்சீவரம், இன்னபிற போன்ற தளங்கள் யாவும் ஒரு காலத்தில் பௌத்தத் தலங்களாக கோலோச்சி கொண்டிருந்தன என்பதை ஆதாரப்பூர்வமாக இந்நூலில் நிறுவியிருக்கிறார் . மேலும் இந்நூலின் ஆசிரியர் கருவாக எடுத்துக் கொண்டுள்ள ஓணம் பண்டிகை பற்றி நாம் பார்த்தோமேயானால் , பொதுவாக ஓணம் என்றாலே நம் நினைவுக்கு வருவது கேரளா தான். அங்கு ஓணம் பண்டிகை மதங்கள் கடந்தும் கொண்டாடப்படுவதால் ' ஓணம்' கேரளாவின் அடையாளமாகவே திகழ்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. இவ்வாறு கேரளாவின் அடையாளமான ஓணம் பண்டிகைக்கு தமிழகப் பகுதிகளிலும் தொடர்பு இருந்திருக்கிறது. அத் தொடர்பு சமயம் சார்ந்த தொடர்பு அதுவும் பௌத்த சமயம் சார்ந்த தொடர்பே என்பதே ஆதாரங்களோடு இந்நூலில் நிரூபித்திருக்கிறார் இந்நூலாசிரியர். பௌத்த மரபு சார்ந்த ஓணம் பண்டிகை இன்று வைணவ மரபு சார்ந்ததாக திரித்துக் கூறப்பட்டு இருக்கிறது என்பதையும் தரவுகளோடு விளக்கியிருக்கிறார் என்பது இந்நூலின் கூடுதல் சிறப்பம்சம். இதன் மூலம் கேரளாவில் பௌத்த சமயம் ஒரு காலத்தில் கோலோச்சிக் கொண்டிருந்தது என்பதை நாம் அனுமானிக்க முடிகிறது . இந்த ஓணம் பண்டிகையைக் கேரள மக்கள் பேச்சு வழக்கில்"சிரவணப் பண்டிகை"என்று கூறுகிறார்கள் . அதனால் இந் நூலின் ஆசிரியரும் சிறவண என்ற சொல்லில் இருந்தே தனது ஆய்வை தொடங்கியிருப்பது தனிச்சிறப்பாகும் .
சிரவண என்ற சொல்லை எதற்காக தனது ஆய்வுக்காக நூலின் ஆசிரியர் எடுத்திருக்கிறார் என்பதுதான் நாம் இங்கு கவனிக்கத்தக்கது. ஏனெனில் அந்த சிரவண என்ற சொல் 'பாலி' மொழிச் சொல்லாகும். இதன் தமிழ்ச்சொல்லே திருவோணம் என்பதாகும் . இதன் மூலம் கேரளாவில் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையும் பௌத்தப் பண்டிகையே என்பதை வரலாற்று ஆய்வுகளோடு நிரூபித்திருக்கிறார். மேலும் இந்நூலின் அழகுக்கு அழகு சேர்ப்பது போல் பண்டிதர் அயோத்திதாசர் அவர்கள் எழுதிய நூல்களிலிருந்தும் மேற்கோள்களை ஆசிரியர் கையாண்டிருப்பது ஆகப்பொருத்தம் . அதாவது புத்த சங்கத்தார்தான் எக்காலமும் அழியாத எட்டு வகையான யோகங்களை வழங்கியுள்ளனர். அவற்றில் இரண்டாவது யோகம் நியம் அல்லது நியமம் ஆகும் . இந்த நியமம் பத்து வகைப்படும் . மேலும் நியமம் என்பது அட்டாங்க யோகங்களின் இரண்டாம்படி. இது ஒழுக்கத்தின் மூலம் ஆத்ம சுத்தத்தினை அடைவதை வலியுறுத்துகிறது. இந்த நியமங்கள் பத்து வகைப்படும் . அந்தப் பத்து வகையான நியமங்கள் ஒவ்வொன்றுக்கும் விளக்கம் தரும்போது, சித்தாந்த சிரவணம் என்பதற்கு "ஞான சங்கத்தாரை வணங்குதல் மற்றும் அவர்களின் அறிவுரைகளை கேட்குதல் குறிப்பாக, புத்த சங்கத்தாரைப் பரி நிர்வாண தினத்தில் வணங்குதல் என்று பொருளாகிறது" என்கிற பண்டிதர் அயோத்திதாசரின் கூற்றை உற்று நோக்குவது இந்நூலில் கவனிக்கத்தக்கதாகும் . ஏனெனில், கேரள மக்களால் வெகு சிறப்பாக பத்து நாட்கள் கொண்டாடப்படும் இந்த ஓணம் பண்டிகையில் அம்மக்கள் தங்களது வீட்டு முற்றத்தில் அலங்காரம் செய்து கோலமிட்டு கொண்டாடுவதில் அத்தப்பூ கோலம் முதன்மையானதாகும். அத்தப்பூ கோலத்தை மட்டும் ஏன் ஆசிரியர் இங்கு குறிப்பிட்டு கூறுகிறார் என்றால், அத்தம் சித்திரை , சுவாதி ஆகிய நாட்கள் பௌத்த மரபுகளைச் சார்ந்த பெயர்களாக தெரிவதினால். துவாதசி திதியை பொறுத்தவரையில் ஆவணி மாதத்தில் வரும் துவாதசி நிதியைப் சிறப்பாக கொண்டாடுகிறார்கள். இந்த ஆவணி மாதத்தில் வரும் துவாதசியைப் புத்த துவாதசி என்று அழைக்கிறார்கள் . புத்த துவாதசி என்ற சொல் நேரடியாக பௌத்தத்துடன் தொடர்புடையதாக இருப்பதை கவனிக்க வேண்டும். மேலும் சிரவண மாதத்திலேயே இந்தப் புத்த துவாதசி இடம் பெறுவதையும் நாம் கவனத்தில் எடுத்துக் கொண்டால், சிரவண துவாதசி தினத்தில் மக்களிடமிருந்து தானங்கள் பெற்றுக் கொண்டு சிரவண சங்கத்தை சேர்ந்த பிக்குகள் ஓர் இடத்திலிருந்து மறு இடத்திற்குத் தம் பயணத்தை தொடங்குகிறார்கள். இப்படி நடக்கும் நிகழ்வே புத்த துவாதசி . அத்தகைய புத்த துவாதசி நாளில் நடக்கும் சடங்குமுறை திருவோணமெனும் பௌத்தப் பண்டிகை என்பது நமக்கு புலப்படுகிறது. இதற்காகத்தான் சிரவணம் என்ற பாலி மொழிச் சொல்லை ஆசிரியரும் தனது ஆய்வுக்காக கையாண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் சிரவண நாளில் அத்தப்பூ அல்லது அத்தம் பூக்கோலத்தை எதற்காக கேரள மக்கள் ஓணம் திருநாளன்று எல்லோரும் தங்களது வீட்டு முற்றத்தில் போடுவதற்கிறார்கள் என்பதையும் இந்நூலாசிரியர் ஆய்வு செய்திருக்கிறார். அதாவது அத்தம் என்ற சொல்லுக்கு அருகன் என்ற பொருளும் உள்ளது. 'அத்தத்தின் பத்தாவது நாளில் தோன்றிய அச்சுதன்' என்று தமிழின் திவ்யபிரபந்தத்தில் கூறப்படுகிறது. அச்சுதன் என்ற சொல் புத்தர் மற்றும் அருகன் ஆகியோரையும் குறிக்கும் சொல்லாகும். இச்சொல்லை பௌத்த மரபிலிருந்து எடுத்துக்கொண்டு வைணவம் தனதாக்கிக் கொண்டு விட்டது என்று நூலாசிரியர் கூறுகின்ற போது , வைணவம் எவ்வாறு பௌத்த கூறுகள் அனைத்தையும் இம்மண்ணில் மூடிமறைத்து தனதாக்கி கொண்டுள்ளது என்பது தெள்ளத் தெளிவாக நாம் அறிய முடிகிறது ,அனுமானிக்க முடிகிறது . சீன பௌத்தத் துறவிகளான பாகியான் மற்றும் யுவான் சுவாங் இந்தியாவைப் பற்றி எழுதிய குறிப்புகளில் மிக முக்கியமானது "பல புத்தக் கோயில்களில் புத்தரை ரதத்தில் வைத்துக் கொண்டு வருவர்". இது பௌத்தத்தின் முக்கிய பண்பாட்டுக் கூறு என்பதாகும் என்கிற கூற்று இங்கு கவனிக்கத்தக்கது. ஏனெனில் வைணவம் எவ்வாறு பௌத்த மரபுகளை திருடி தனதாக்கிக் கொண்டது என்பது இதன் மூலம் விளங்க வரும் . உதாரணத்திற்கு திருநாகேஸ்வரம் ஒப்பிலியப்பன் கோயிலை எடுத்துக்கொண்டால் இக்கோயிலின் மூலவரின் பெயர் ஒப்பிலியப்பன் . இப்பெயர் புத்தரைக் குறிக்கும் சொல் என்று பண்டிதர் அயோத்திதாசர் விளக்கியிருக்கிறார். மேலும் இங்குள்ள உற்சவரின் பெயர் பொன்னப்பன். பொன்னப்பன் என்பது அருகனை குறிப்பதாக சென்னை பல்கலைக்கழக சொல்லகராதி குறிப்பிடுகிறது என்பதையும் நூலாசிரியர் சுட்டிக் காட்டுகிறார். இத்தகைய சான்றுகளை எல்லாம் நாம் உற்று நோக்குகின்ற பொழுது மக்களிடம் புழக்கத்தில் உள்ள நினைவுகளை அவ்வளவு எளிதாக அவர்களால் மாற்ற முடியவில்லை என்பது தெரியவருகிறது. மேலும் இதன் மூலம் பௌத்த மரபுகளை திருடித் திருடி இந்த மண்ணில் வைணவம் தன்னை நிலை நிறுத்தி இருக்கிறது என்பது புலப்படுகிறது.
திருப்பதி மலைக்கு புல்லிக்குன்றம் என்ற பெயரும் உள்ளது. இந்தப் பெயர் வரக்காரணம் புல்லி என்ற களர்பிர மன்னன் இந்தப் பகுதியை ஆட்சி செய்ததால். இது புல்லிக்குன்றம் எனப் பெயர் பெற்றிருக்கிறது. வெங்கடேசப் பெருமாள் கோயிலின் உற்சவரை மலையப்பசாமி என்று இன்றும் மக்கள் அழைக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றும் திருப்பதி கோயில் கடவுளின் பெயர் மலையப்பசாமி தான் . அந்தக் கோயிலின் கர்ப்பகிரக வாயிலில் உள்ள படியின் பெயரும் குலசேகரன் படிதான். என்கிற இத்தரவுகளை படிக்கின்ற போது திருப்பதி வெங்கடாஜலபதி தலமும் ஒரு காலத்தில் பௌத்த தலமாகத் தான் கோலோச்சிக் கொண்டு இருந்திருக்கிறது என்பது நமக்கு புலப்படுகிறது. சபரிமலைக் கோயிலுக்கு மற்றொரு பெயர் சாஸ்தா கோயில் என்பதும் , சாஸ்தா என்பது புத்தரைக் குறிக்கும் பாலி மொழிச் சொல் என்பதும் நமக்குத் தெரியும். எனவே கேரளாவின் (முன்னாள்) பௌவுத்த கோயிலாகிய அயப்பன் கோயிலுக்குள் கொண்டுவரப்படும் அரவணப் பாயாசம் செட்டிக் குளக்கரைக் கோயிலிலிருந்து கொண்டாடப்படுவதால் , இக்கோயிலும் ஒரு காலத்தில் பௌத்தக் கோயிலாக கோலோச்சிக் கொண்டிருந்திருக்கிறது என நாம் யூகிக்க முடியும். இதன் மூலம் இக்கோயிலில் அழிக்கப்பட்டதாக கூறப்படும் 'சிரவண பாதம்' என்பது புத்தரின் பாதமே என்ற முடிவுக்கு வரலாம். இதன்மூலம் இந்துக் கோயில்களாக மாற்றப்பட்ட பௌத்தக் கோயில்களை இனங்காணவும் இந்நூல் நமக்குத் துணை செய்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது.
திருநெல்வேலி வட்டார பகுதிகளில் இன்றும் மாவலி சக்கரவர்த்தி நினைவாக கார்த்திகை மாதத்தில் கார்த்துல தீபத் திருநாளை மாவலி தானம் என்று மக்கள் கொண்டாடி வருவதை இந்நூலாசிரியர் குறிப்பிட்டிருப்பதைப் பார்த்து நானும் இத்தனை காலம் வரை நாம் கொண்டாடிக் கொண்டு இருக்கின்ற ஒவ்வொரு திருவிழாவுக்கான வரலாற்று நிகழ்வுகளுக்கான காரணம் என்ன என்பதை அறியாமல் தான் கொண்டாடி வந்து இருக்கின்றோமோ என்கிற ஒரு கேள்வியை எழுப்புகிறது இந்நூல். காரணம் என்னவென்றால் ஆசிரியர் குறிப்பிட்டுள்ளபடியே இப்பொழுதும் எங்கள் பகுதியில் கார்த்திகை மாதமன்று கார்த்துல தீபத் திருநாளை முன்னிட்டு ஒவ்வொரு வீட்டிலும் பச்சரிசி மாவில் கொழுக்கட்டை செய்து, அதில் ஏழு கொழுக்கட்டைகளை முறத்தில் வைத்து அவற்றின் மீது விளக்குத் திரியிட்டு எரியவிட்டு , வீட்டு வாசலில் நின்று அவற்றை வீட்டில் உள்ள தலப் பிள்ளையின் தலையில் வைத்து 'மாவிளக்கு மாவிளக்கு' என்று சொல்லி கத்தியது என் நினைவுக்கு வருகிறது. ஆனால் இந்நூலைப் படிக்கின்ற பொழுதுதான் தெரிகிறது அதற்கான உண்மையான பெயர் மாவிளக்கு அல்ல 'மாவலியானம்'என்பது . இப்பொழுதும் எங்கள் பகுதிகளில் அது நடைபெற்றுவருகின்றது 'மாவிளக்கு மாவிளக்கு' என்கிற பெயரில் கார்த்துல தீபத்திருநாளன்று.
இந்த மாவலி பற்றி ஆசிரியர் கூறும் போது மாவலி கற்பனை பாத்திரம் அல்ல. மேலும் மாவலி புத்த சங்கத்தில் சேர்ந்து பௌவுத்தத்தைப் பரப்பியவர் என்பது. அதற்குச் சான்றாக கேரளாவின் மாவலிகர மற்றும் தமிழகத்தின் மகாபலிபுரப் பகுதிகளில் பௌத்தம் சார்ந்த சான்றுகள் கிடைத்துள்ளன. குறிப்பாக புத்தர் சிலைகள் . இச்செய்தி ஆசிரியரின் பௌத்தம் பற்றிய தேடலின் முக்கியத்துவத்தை நமக்குக் காட்டுகிறது . மேலும் பௌத்தத்தை மீண்டும் இம்மண்ணில் மீளுருவாக்கம் செய்ய வேண்டும் என்கிற ஆதங்கத்தையும் தூண்டுகிறது. பொதுவாக இறந்தவர்களை வணங்கும் நிகழ்வு என்பது பௌத்தப் பண்பாட்டு வழிமுறைகளில் ஒன்றாகும் என்கிற செய்தி இந்நூலில் கூறியிருப்பதை நாம் உற்று நோக்க வேண்டும். ஏனெனில் மற்ற எந்த மதத்தினரும் இறந்தவரை வணங்குவது (குறிப்பாக சைவம், வைணவம்) கிடையாது. தெய்வப்புலவர் திருவள்ளுவரும் தனது குறளில் கூறுகிறார் இவ்வாறு ,
'தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓப்பல் தலை ' என்று.



அதாவது இதற்குப் பொருள் என்னவென்றால் , வாழ்ந்து மறைந்தோரை நினைவு கூறுதல் , வாழ்வாங்கு வாழ்வோரைப் போற்றுதல் , விருந்தோம்பல், சுற்றம் பேணல் ஆகிய கடமைகளை நிறைவேற்றத் தன்னை நிலைப்படுத்திக் கொள்ளல் எனப்படும் ஐவகை அறநெறிகளும் இல்வாழ்வுக்குரியனவாம் . அதாவது இல்வாழ்க்கையில் இருப்பவர்கள் முன்னோர்களை நினைவு கூறுவது தங்களின் கடமை என்று வள்ளுவர் கூறுகிறார். இதன்மூலம் வள்ளுவரும் பௌத்த சமயத்தைச் சார்ந்தவர் என்பது ஆதாரப்பூர்வமாக தெளிவாகிறது. ஏனெனில் வள்ளுவர் "நீத்தார் பெருமை" பற்றி ஒரு அதிகாரமே இயற்றியுள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் இன்றும் இறந்தவர்களை வணங்கும் மரபுகளை கடைபிடித்து கொண்டிருப்பவர்கள் யாவரும் ஒருகாலத்தில் பௌத்தர்களாக இருந்தவர்களே என்பதை நாம் அனுமானிக்க முடிகிறது.
உலக நாடுகளில் எல்லாம் பௌத்த திருவிழாக்கள் கொண்டாடப் படும் நாட்களை கொண்டு நூலின் ஆசிரியர் ஒரு கணித ஆசிரியர் என்பதால் கணக்குப்போட்டு பார்த்திருக்கிறார் போல அதாவது, பௌத்த நாடுகளில் கொண்டாடப்படும் பௌத்தத் திருவிழா நாட்களில்தான் இங்கும் நம்மவர்கள் அட்சய திருதியை கொண்டாடுகிறார்கள் என்றும் இதே நாளில்தான் ஜப்பான், தீபத் போன்ற நாடுகளில் குபேர வழிபாடும், பௌத்த விகாரைகளில் தானமும் வழங்கப்பட்டு வருகிறது என்று.
அதாவது உலக நாடுகளில் எல்லாம் கோலோச்சிக் கொண்டிருக்கும் பௌவுத்தத்தை இன்று , தான் தோன்றிய மண்ணிலேயே இந்துமதம் நிர்மூலமாக்கியது என்பதை நினைத்துப் பார்க்கையில் பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் அவர்கள் சொன்னது நினைவுக்கு வருகிறது அதாவது, "பௌத்தத்திற்கும் பார்ப்பனியத்திற்கு நடந்த யுத்தமே இந்திய வரலாறு" என்பது.
மேலும் நூலாசிரியர் எமது மாவட்டத்தைப் பற்றியும் , பேராசிரியர் ஜெயபிரகாஷ் அவர்கள் கூறியுள்ள கூற்றை மேற்கோள் காட்டி இருக்கிறார் என்பதும் கவனிக்கத்தக்கது . அதாவது பௌத்த நகரம் திருநெல்வேலியின் பழைய பெயர் "வேணுவனம்"என்கிற மேற்கோளை சுட்டிக்காட்டி இருப்பது நமது மாவட்டத்தை பற்றி நாமும் இன்னும் நிறைய தகவல்களை அறிந்து கொள்ள வேண்டும் என்பதை எனக்குச் சுட்டிக் காட்டுவதாக இருக்கிறது. இறுதியாக ஒன்றை மட்டும் சொல்லிக் கொண்டு முடித்துக் கொள்ள ஆசை கொள்கிறேன் அதாவது, சாதி மதம் கடந்து நடக்கும் அனைத்து விழாக்களும் பௌத்தப் பண்பாட்டுக் கூறுகளே , ஏனெனில் சாதி மதம் கடந்த விழாக்களை வைதீக மரபினர் யாரும் இந்தச் சாதிய தேசத்தில் கொண்டாடுவதில்லை.எனவே பௌத்தப் பண்பாட்டுக் கூறுகளை திருடித் தனதாக்கிக் கொண்டுள்ள திருட்டு மதங்களைக் இனம்கண்டு மீண்டும் இம்மண்ணிலே பௌத்தத்தை நிலைபெற செய்வது என்பது காலத்தின்
கட்டாயத் தேவையாகும் .
ஜெய்பீம் .



-

1 comment:

സംവരണത്തിന്റെ സാമൂഹ്യപാഠം : രഞ്ജിത്ത് ചട്ടഞ്ചാൽ

  കാലങ്ങളായി തുടരുന്ന ജാതി - മത വിവേചനങ്ങളുടെ പ്രൊഫസർ രാജ് മദ്രാസ് ഐഐടി യുടെ പേര് അന്നേ മാറ്റിയെഴുതിയിരുന്നു - 'അയ്യർ അയ്യങ്കാർ ടെക്നോളജ...